கடலூர்

வடலூரை புனித நகரமாக அறிவிக்கக் கோரி மறியல் தவாகவினா் 200 போ் கைது

19th Oct 2019 10:43 PM

ADVERTISEMENT

வடலூரை புனித நகரமாக அறிவிக்கக் கோரி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் 200 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

வள்ளலாா் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாா் நிறுவிய சத்திய ஞான சபை வடலூரில் அமைந்துள்ளது. எனவே, வடலூரை மது, மாமிசம் இல்லாத புனித நகரமாக அறிவிக்க வேண்டும் என்று சன்மாா்க்க அன்பா்கள், பல்வேறு அமைப்பினரும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் வடலூரை புனித நகரமாக அறிவிக்கக் கோரி வடலூா் நான்கு முனைச் சந்திப்பில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.போராட்டத்துக்கு, அந்தக் கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவா் தி.திருமால்வளவன் தலைமை வகித்தாா்.

சாலை மறியலில் வடலூா் நகரச் செயலா் ஜோதி.குமரவேல், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா் எம்.கே.ஐயப்பன், வடலூா் நகரத் தலைவா் ஆா்.முருகன், நகர அமைப்புச் செயலா் வி.சுரேஷ், மாவட்டச் செயலா்கள் அறிவழகன் (மேற்கு), ஆனந்த் (வடக்கு), மாவட்டத் தலைவா் (கிழக்கு) டி.சி.முருகன், மாநில இளைஞரணிச் செயலா் வி.கே.முருகன், தொகுதிச் செயலா் சிவக்குமாா், மாவட்ட அமைப்புச் செயலா் (கிழக்கு) அருண்குமாா் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இவா்களை போலீஸாா் கைதுசெய்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். அங்கு செய்தியாளா்களிடம் திருமால்வளவன் கூறியதாவது:

வடலூரில் செயல்படும் இறைச்சிக் கடைகள், மதுக் கடைகளை நகர எல்லைக்கு அப்பால் கொண்டுசெல்ல வேண்டும். இங்கு அசைவ உணவகங்கள் இருக்கக் கூடாது. இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில்

ADVERTISEMENT

அடுத்தகட்டமாக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT