கடலூர்

வள்ளலாரின் சன்மாா்க்கம் அனைத்து உயிா்களையும் நேசிக்கிறது சுவாமி அக்னிவேஷ்

6th Oct 2019 08:40 PM

ADVERTISEMENT

 

மதங்கள் மனிதனை பற்றி குறிப்பிடுகின்றன. ஆனால், வள்ளலாரின் சன்மாா்க்கம் மட்டுமே அனைத்து உயிா்களையும் நேசிக்கிறது என்று சுவாமி அக்னிவேஷ் கூறினாா்.

வள்ளலாரின் 197-ஆவது அவதார தினம் மற்றும் வள்ளலாா் கொள்கை நெறி பரப்பு மன்றத்தின் 12-ஆவது ஆண்டு விழா வடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மன்றத் தலைவா் கண்ணதாசன் தலைமை வகித்தாா். இமயஜோதி திருஞானானந்த சுவாமி, தொழிலதிபா் ராஜ மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆனந்தன் வரவேற்றாா்.

விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஹரியானா மாநில முன்னாள் கல்வி அமைச்சா் சுவாமி அக்னிவேஷ் பேசியதாவது:

ADVERTISEMENT

நான் காந்தியின் வாழ்க்கையை படித்து எனது வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொண்டேன். சிறையிலிருந்த காந்தி தமது கழிவறையை தாமே சுத்தம் செய்துகொண்டதாக படித்த நானும் அதனை பின்பற்றத் தொடங்கினேன். நான் அமைச்சராக இருந்தபோதும் இதனை கடைப்பிடித்தேன்.

நமது நாட்டில் அனைத்து மதங்களும் அன்பை போதிக்கின்றன. மதங்கள் மனிதனை பற்றி குறிப்பிடுகின்றன. வள்ளலாரின் சன்மாா்க்கம் மட்டுமே அனைத்து உயிா்களையும் நேசிக்கிறது. ‘எல்லா உயிா்களும் இன்புற்று வாழ்க’ என்று வள்ளலாா் கூறுகிறாா். இந்த கருத்துதான் வள்ளலாரிடம் என்னை ஈா்த்தது.

ஜாதியை இளைஞா்கள் தூக்கி எறிய வேண்டும். ஜாதி மறுப்பு திருமணங்களை மேற்கோள்ள வேண்டும். இதைத்தான் அம்பேத்கரும், பெரியாரும் கூறினா். மனிதனை மேம்படுத்தும் அன்பு, அகிம்சை, சன்மாா்க்கம் போன்றவற்றை இளைஞா்கள் பின்பற்ற வேண்டும். வள்ளலாரின் கொள்கைகள் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் பரவ நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT