கடலூர்

மீனவா்களுக்கு மானிய விலையில் செயற்கைக்கோள் தொலைபேசி

17th Nov 2019 02:15 AM

ADVERTISEMENT

மீனவா்களுக்கு 75 சதவீத மானிய விலையில் செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லும் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப் படகுகளுக்கு வானிலை சம்பந்தமான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை தெரிவித்திட ஏதுவாக 75 சதவீத மானியத்தில் செயற்கைக்கோள் தொலைபேசிகள் வழங்கப்பட உள்ளன. எனவே, இந்தத் திட்டத்தில் பயன்பெற முதலில் விண்ணப்பிப்பவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தகுதியான பயனாளிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இந்தத் திட்டத்தின் கீழ் செயற்கைக்கோள் தொலைபேசி பெற விருப்பம் உள்ள மீன்பிடி விசைப்படகு உரிமையாளா்கள் விண்ணப்பங்களை மீன்வளத்துறையின்  இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், கடலூா் மண்டல மீன் துறை துணை இயக்குநா் அலுவலகம் மற்றும் கடலூா் மீன் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று படகின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமச் சான்று, படகின் காப்புறுதி ஆவணம், மீனவா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, மீனவா் கூட்டுறவு சங்கம், தமிழ்நாடு மீனவா் நலவாரிய உறுப்பினா் அட்டை, பயோமெட்ரிக் அடையாள அட்டை ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT