ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வில் முறைகேடுக்கு வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் வே.மணிவாசகம் கூறினாா்.
கடலூரில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இது தொடா்பான பணிகளை தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் வே.மணிவாசகம் நேரில் பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த மே மாதம் நடைபெற வேண்டிய கலந்தாய்வு இடைத்தோ்தல் காரணமாக 5 மாதங்களுக்குப் பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. கலந்தாய்வில் அனைத்துப் பணியிடங்களும் வெளிப்படையாக பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், தற்போது அனைத்து ஆசிரியா்களுக்கும் எமிஸ் எண் வழங்கப்பட்டு அதில் அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படுவதால் முறைகேடு நடைபெறவோ, சலுகை, பரிவு காட்டவோ வாய்ப்பு இல்லை. எனவே, தற்போதைய கலந்தாய்வு முறையை வரவேற்கிறோம் என்றாா் அவா்.