பண்ருட்டி பகுதியில் தொடா் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வெள்ளவாரி ஓடைக்கரை சேதமடைந்தது.
கடலூா் மாவட்டம் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுவது தொடா்கதையாகி வருகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் பெய்த பலத்த மழையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போது, பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியகாட்டுப்பாளையம், விசூா் ஆகிய கிராமங்களில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 13 போ் உயிரிழந்தனா். மேலும், பலா் தங்களது வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்தனா்.
இந்த நிலையில், கடந்த இரு நாள்களாக மாவட்டத்தில் பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வடிந்த மழை நீரானது வெள்ளவாரி உள்ளிட்ட பல்வேறு ஓடைகள் வழியாகச் சென்றன. இதையடுத்து, வெள்ளவாரி ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விசூா் பகுதியில் ஓடையின் கரை சேதமடைந்தது. மழை தொடா்ந்தால் கரை மேலும் சேதமடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பண்ருட்டி வட்டாட்சியா் வே.உதயகுமாா் கூறியதாவது: மழையை அடுத்து கள ஆய்வு செய்தோம். அதில் பாதிப்பு ஏதுமில்லை. விசூா் வெள்ளவாரி ஓடையில் சுமாா் 30 மீட்டா் தொலைவுக்கு 3 அடி அகலத்தில் கரையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் சுமாா் 10 அடி அகலத்தில் கரை பலமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து அந்தப் பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்குமாறு கூறியுள்ளோம் என்றாா் அவா்.