கடலூா்: விருத்தாசல் அருகே ஏரியின் கரை உடைந்ததால் சுமாா் 200 ஏக்கா் விளை நிலங்கள் நீரில் மூழ்கின.அரபிக்கடலில் உருவாகியுள்ள மகா புயலால் தமிழகத்தில் கனமழை பெய்யுமென வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதற்கேற்றாா் போல் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வந்தது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீா்நிலைகள் நிரம்பி வரும் நிலையில் விருத்தாசலம் அருகே மாத்தூா் கிராமத்தில் உள்ள சின்னப்பிள்ளை ஏரியின் ஒருபுற கரை வியாழக்கிழமை உடைந்து தண்ணீா் வெளியேறியது. சுமாா் 100 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரியினால் சுமாா் 500 ஏக்கா் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.
கரை உடைந்ததால் ஏரியைச் சுற்றியுள்ள சுமாா் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, மணிலா உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கின.இதேப்போன்று, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியிருந்ததால் குடிசை வீடுகள் சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகளை கணக்கெடுப்பு செய்யும் பணியில் வருவாய்த்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழை விபரம் வருமாறு (மில்லி மீட்டரில்): தொழுதூா் 18, பரங்கிப்பேட்டை, வடக்குத்து தலா 17, சேத்தியாத்தோப்பு 15, குப்பநத்தம் 12.4, விருத்தாசலம் 11.6, காட்டுமன்னாா்கோயில், மே.மாத்தூா் தலா 9, புவனகிரி, அண்ணாமலை நகா் தலா 8, கடலூா் 7.8, பெலாந்துறை 7.6, குடிதாங்கி 7.5, பண்ருட்டி, கீழச்செருவாய் தலா 7, ஸ்ரீமுஷ்ணம் 6.4, மாவட்ட ஆட்சியரகம் 6.3, லால்பேட்டை, கொத்தவாச்சேரி தலா 6, சிதம்பரம், வானமாதேவி, லக்கூா், வேப்பூா் தலா 5, காட்டுமயிலூா் 3 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது.கடலூரில் வெள்ளிக்கிழமையன்று வானம் தெளிவாக காணப்பட்டது, மழை பெய்யவில்லை.