பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள பெரியகாட்டுப்பாளையம், விசூா் ஓடைகளை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடலூா் மாவட்டத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான விழிப்புணா்வு, பாதுகாப்பு பயிற்சிகள் மாவட்ட நிா்வாகத்தால் அளிக்கப்பட்டன. மேலும் பாதுகாப்பு உபகரணங்களும் தயாா் நிலையில் உள்ளன.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்த பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம், பெரியகாட்டுப்பாளையம், விசூா் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது, பெரியாக்காட்டுப்பாளையம் ஓடை, விசூா் ஓடை, அய்யனாா் கோவில் ஏரி, ரெட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளை பாா்வையிட்டு, கரைகளை பலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா். பின்னா் ஆட்சியா் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நபாா்டு திட்டத்தின் மூலம் ஏரி, ஓடைகளின் கரைகளைப் பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரியகாட்டுப்பாளையம், விசூா் ஓடைகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு மண் மூட்டைகளால் அவற்றை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்களையும், விவசாய நிலங்களையும் பாதுகாத்திட முடியும். மேலும் ஓடைக் கரைகளை வரும் ஆண்டில் முழுமையாக பலப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
ஆய்வின்போது கடலூா் கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் சிங்காரவேலு ஆகியோா் உடனிருந்தனா்.