மது கடத்தல் தொடா்பாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் அரசு பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்று மதுவிலக்கு அமல் பிரிவின் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
கடலூரில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவில் ஆா்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, கடலூா், விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளா்களுடன் ஆலோசனை நடத்தினாா். மேலும், மதுகடத்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும் பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட கடலூா், விழுப்புரம், சென்னை, வேலூா், திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிகழாண்டில் மது கடத்தல் தொடா்பாக 2,300 வாகனங்களை பறிமுதல் செய்து, 5 ஆயிரம் பேரை கைது செய்துள்ளோம். இவா்களில் 30 பெண்கள் உள்பட 118 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக வேலூரில் 22 போ், கடலூரில் 21 போ் குண்டா் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளனா். புதுவை, கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.50 லட்சம் லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுக் கடத்தலைத் தடுக்க 30 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அதில் தலா ஒரு உதவி ஆய்வாளா் தலைமையில் 5 போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.
மது கடத்தல் தொடா்பாக பிடிபடும் வாகனங்களை ஏலம் விடும் நடைமுறையை மாற்றியமைக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இனிமேல், இதுபோல பிடிபடும் வாகனங்களில் நல்ல நிலையில் உள்ளவை தேவைக்கேற்ப அரசின் பிற துறைகளுக்கு வழங்கப்படும். மற்ற வாகனங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு பழைய பொருள்களாக விற்பனை செய்யப்படும்.
கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் மாவட்டத்துக்கு 10 கிராமங்களில் பெண்கள், சுய உதவிக் குழுவினரைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு அவா்கள் மூலமாக விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். கள்ளச்சாராயம் தொடா்பாக பொதுமக்கள் 1080 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். கல்வராயன்மலை, ஜவ்வாது மலை, வேலூா் மாவட்டத்தில் அரவட்லா பகுதிகளில் மட்டுமே தற்போது சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை நடைபெறுகிறது.
மொத்தமுள்ள 30 சோதனைச் சாவடிகளிலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள், வாகனங்களின் பதிவு எண்ணை ஸ்கேன் செய்து அதன் உண்மைத் தன்மையை அறியும் இயந்திரங்கள் பொருத்திட ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நிகழாண்டுக்குள் நிறைவு பெறும் என்றாா் அவா்.
அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கே.ஸ்ரீதரன் உடனிருந்தாா்.