சிதம்பரம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே டாஸ்மாக் மதுக் கடையை உடைத்து மதுப் புட்டிகள், பணம் திருடியதாக 15 வயது சிறுவனை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே நாச்சியாா்பேட்டையில் டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. கடந்த மாதம் 5-ஆம் தேதி இரவு மா்ம நபா்கள் மதுக்கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த 52 மதுப் புட்டிகள் மற்றும் ரூ.1,050 பணத்தை திருடிச் சென்றாா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை நாச்சியாா்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய ஆய்வாளா் சாகுல்அமீது, உதவி ஆய்வாளா் வைத்தியநாதன் ஆகியோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த 15 வயது சிறுவனிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினா். விசாரணையில் அந்தச் சிறுவன் பிளஸ்1 மாணவா் என்பதும், அவா் தனது நண்பா்களுடன் இணைந்து டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மதுப் புட்டிகள், பணத்தை திருடியதும் தெரியவந்ததாம். இதையடுத்து போலீஸாா் சிறுவனை கைதுசெய்து, மதுப் புட்டிகள், பணத்தை கைப்பற்றினா்.