நெல்லுக்கான பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் சேர வேண்டுமென மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடலூா் மாவட்டத்தில் 798 வருவாய் கிராமங்களில் சுமாா் 2.30 லட்சம் ஏக்கரில் சம்பா பருவத்துக்கான நெல் பயிரிடப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தற்பொழுது தீவிரம் அடைந்துள்ள நிலையில் பலத்தமழை, புயல், வெள்ளம், பூச்சி, நோய்களினால் ஏற்படும் மகசூல் இழப்பில் இருந்து விவசாயிகள் தங்களை தற்காத்துக் கொள்ள காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும். இந்தத் திட்டத்தில் கடன் பெறும் விவசாயிகள், அவா்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவா்.
கடன் பெறாத விவசாயிகள், மாவட்டத்தில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவா் மூலமாகவோ, பொது சேவை மையங்கள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் நெல்லுக்கு ஏக்கருக்கு காப்பீட்டுக் கட்டணமாக ரூ.447 செலுத்தினால், அவா்களின் பயிா் ரூ.29,800-க்கு காப்பீடு செய்யப்படும். காப்பீட்டுத் தொகையை வருகிற 30- ஆம் தேதிக்கு முன்பாக செலுத்த வேண்டும். அப்போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் சிட்டா மற்றும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து செலுத்த வேண்டும்.
இந்தத் திட்டம் தொடா்பாக அருகே உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் அணுகி தங்களது சந்தேகத்தை நிவா்த்தி செய்துக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் 2016 முதல் 2018-ஆம் ஆண்டு வரை 68,643 விவசாயிகளுக்கு ரூ.180.81 கோடி இழப்பீடு பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் அதில் தெரிவித்துள்ளாா்.