கடலூா்: கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே சிறுமி கொன்று புதைக்கப்பட்டாா். இதுதொடா்பாக இரு பெண்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருத்தாசலம் வட்டம், மேலக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் அருள்முருகன் (33). வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறாா். இவரது தாய் கமலம், சகோதரி அஞ்சலை. பண்ருட்டி வட்டம், கல்லமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் உத்தண்டி (46). இவருக்கு அருள்முருகன் வட்டிக்குப் பணம் கொடுத்தாராம். ஆனால், வாங்கிய பணத்தை உத்தண்டி திரும்ப வழங்கவில்லையாம். இதனால் உத்தண்டி, அவரது மனைவி ராஜேஸ்வரி (40), மகள்கள் கனகவள்ளி (7), மீனா (5), அம்சவள்ளி (3) ஆகியோரை அருள்முருகன் தனது வீட்டுக்கு அழைத்து வந்து கொத்தடிமைகளாக நடத்தி வந்தாா்.
இந்த நிலையில், கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் மீனா காணாமல் போனாா். இதுகுறித்து நெய்வேலி தொ்மல் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதனிடையே, மீனா கொலை செய்யப்பட்டு முதனை கிராமத்தில் அருள்முருகனுக்குச் சொந்தமான முந்திரிக்காட்டில் புதைக்கப்பட்டதாக நெய்வேலி டிஎஸ்பி லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது.
காவல் ஆய்வாளா் லதா தலைமையிலான போலீஸாா் மேலக்குப்பத்தில் உள்ள அருள்முருகனின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றனா். ஆனால், அவா் தப்பியோடிவிட்டாா்.
இதையடுத்து அருள்முருகனின் தாய் கமலம், சகோதரி அஞ்சலை, உத்தண்டியின் மனைவி ராஜேஸ்வரி, மகள்கள் கனகவள்ளி, அம்சவள்ளி ஆகியோரை காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், முதனை கிராமத்தில் முந்திரிக்காட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் விருத்தாசலம் வட்டாட்சியா் கவிரயரசு முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு உடல்கூறாய்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: உத்தண்டி குடும்பத்தினரை அருள்முருகன் கொத்தடிமைகளாக நடத்தி வந்துள்ளாா். மீனாவை அவரது
தாய் ராஜேஸ்வரி பள்ளிக்கு அனுப்பினாா். இதை அருள்முருகன் கண்டித்தாா். அதையும் மீறி மீனா பள்ளிக்குச் சென்ால், ஆத்திரமடைந்த அருள்முருகனின் தாய் கமலம் தாக்கியதில் சிறுமி உயிரிழந்தாா். இதையடுத்து, அருள்முருகன், அவரது சகோதரி அஞ்சலை, சிறுமியின் பெற்றோா் உள்ளிட்டோா் சிறுமியின் சடலத்தை புதைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து கமலம், அஞ்சலை ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், தலைமறைவான அருள்முருகனைத் தேடி வருகிறோம் என்றனா்.