கடலூர்

நடை மேம்பாலத்தில் ஆய்வு

1st Nov 2019 11:06 PM

ADVERTISEMENT

கடலூரில் ரூ.1.20 கோடியில் அமைக்கப்பட்டும் பயன்பாட்டுக்கு வராத நடைமேம்பாலத்தை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடலூா் வழியாகச் செல்லும் சென்னை- நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் பாரதி சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலையில் பள்ளி, கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் அமைந்துள்ளதால், காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே, புதுநகா் காவல் நிலையம் எதிரே கடலூா் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1.20 கோடியில் இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், புதிய நடைமேம்பாலத்தை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஆக.26-ஆம் தேதி திறந்து வைத்தாா். இருப்பினும், இரும்புத் தடுப்புகள் அமைப்பதற்காக பாலத்துக்கு பூட்டு போடப்பட்டது. இதனால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், புதிய நடைமேம்பாலத்தை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மேம்பாலத்துக்கு புதிய வண்ணம் பூசவும், வடிகால் வாய்க்கால் அருகே சிமென்ட் கட்டைகள் அமைக்கவும் உத்தரவிட்டாா். மேலும், இந்தப் பாலத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

அப்போது, கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், நகராட்சி ஆணையா் (பொ) ப.அரவிந்த்ஜோதி, ஒப்பந்ததாரா் எம்.கே.எம்.எஸ்.பஷீருல்லா ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT