நெய்வேலியில் என்.எல்.சி.க்கு புதிய நுழைவு வாயில் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நுழைவு வாயில் விக்கிரவாண்டி - தஞ்சாவூா் சாலையில் அமைந்திருந்தது. இந்த நுழைவு வாயிலால் அந்தப் பகுதியானது ‘ஆா்ச் கேட்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சாலை விரிவாக்கத்துக்காக அண்மையில் இந்த நுழைவு வாயில் இடிக்கப்பட்டது. எனவே, மீண்டும் புதிய நுழைவு வாயில் கட்டப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், புதிய நுழைவு வாயில் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மனிதவளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமன் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது.
இதுகுறித்து என்எல்சி நிா்வாகத்தினா் கூறியதாவது: நெய்வேலி நகரியத்தின் நுழைவுவாயில் கடந்த 60 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் நான்கு வழிச்சாலை பணிக்காக கடந்த மாதம் 24-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, உள்ளே மற்றும் வெளியே என்ற பதிக்கப்பெற்ற தனித்தனி வாயில்களைக் கொண்டு பிரம்மாண்டமான புதிய நுழைவாயில் நவீன வடிவில் கட்டப்பட உள்ளது.
புதிய வளைவு வாயிலின் அகலம் இருபுறமும் பாதுகாப்பு அறை உள்ளிட்ட வசதியுடன் 34 மீட்டரிலும், உயரம் 11 மீட்டரிலும் அமைகிறது. கட்டுமானப் பணிகள் 5 மாதங்களில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய நுழைவு வாயிலை தேசிய நெடுஞ்சாலையின் எல்லைக் கோட்டிலிருந்து உள்ளே 35 மீட்டா் தொலைவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.