வாக்குகள் எண்ணிக்கை மையத்தில் ஐ.ஜி. ஆய்வு

மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை மையமான கடலூர் அரசுக் கல்லூரியில் காவல் துறை வடக்கு மண்டல ஐஜி பி.நாகராஜன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை மையமான கடலூர் அரசுக் கல்லூரியில் காவல் துறை வடக்கு மண்டல ஐஜி பி.நாகராஜன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
 மக்களவைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கடலூர், தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, கடலூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக காவல் துறையின் வடக்கு மண்டல தலைவர் பி.நாகராஜன் செவ்வாய்க்கிழமை கடலூர் வந்தார். பின்னர், வாக்கு எண்ணிக்கை மையத்துக்குச் சென்ற அவர், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறை, தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், கல்லூரி நுழைவு வாயில்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.
 தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விழுப்புரம் சரக துணைத் தலைவர் சந்தோஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், துணைக் கண்காணிப்பாளர்கள் க.சாந்தி, ஸ்ரீதரன், நாகராஜன், லோகநாதன், இளங்கோவன், சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
 பாதுகாப்புப் பணியில் 528 போலீஸார்: கடலூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 528 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மேற்பார்வையில் 7 துணைக் கண்காணிப்பாளர்கள், 29 ஆய்வாளர்கள், 66 உதவி ஆய்வாளர்கள், 225 காவலர்கள், 92 தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு படை காவலர்கள், 24 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com