போலீஸார் மீது தாக்குதல்:  3 பேரிடம் விசாரணை

கடலூரில் போலீஸாரை தாக்கியவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

கடலூரில் போலீஸாரை தாக்கியவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
 கடலூர் போக்குவரத்துப் பிரிவு காவலராகப் பணிபுரிந்து வருபவர் நாகராஜ். இவர் வெள்ளிக்கிழமை மாலை கடலூர் பேருந்து நிலையம் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார். அப்போது, திருப்பாதிரிபுலியூர் பகுதியிலிருந்து ஒரே மொபெட்டில் 3 இளைஞர்கள் வந்தனர். அவர்களை காவலர் மறித்தபோது, 3 பேரும் மது போதையில் இருந்தது தெரியவந்ததாம். மேலும், அவர்கள் காவலருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினர். 
 இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், திருப்பாதிரிபுலியூரில் பணியில் இருந்த மற்றொரு போக்குவரத்து காவலர் பு.தேவநாதன் (32) என்பவரிடமும், பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலைய காவலரிடமும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் நிகழ்விடத்துக்குச் சென்று தாக்குதலை தடுக்க முயன்றனர். ஆனால், அந்த இளைஞர்கள் 3 காவலர்களையும் தாக்கினர். இதில் காவலர் தேவநாதன் பலத்த காயமடைந்தார். 
 இதைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பகுதி மக்கள், திடீரென திரண்டு காவலர்களுடன் தகராறில் ஈடுபட்ட 3 இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து தாக்கினர். போலீஸார் அவர்கள் 3 பேரையும் மீட்டு திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காயமடைந்த காவலர் தேவநாதன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த காவலரை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சன்னியாசிப்பேட்டையைச் சேர்ந்த விஜயரங்கன் மகன் கன்னியப்பன் (23), அண்ணாமலை மகன் விஜயரங்கன் (24), சங்கர் மகன் கிருபா (26) ஆகியோர் எனத் தெரியவந்தது. போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com