கத்திரி வெயிலை சமாளிப்பது எப்படி ?

கத்திரி வெயில் சனிக்கிழமை தொடங்குவதை முன்னிட்டு, வெயிலின் தாக்கத்தை  சமாளிக்க பொதுமக்கள்

கத்திரி வெயில் சனிக்கிழமை தொடங்குவதை முன்னிட்டு, வெயிலின் தாக்கத்தை  சமாளிக்க பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் வரும் 30 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்படி, வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். 
குறிப்பாக, நண்பகல் 12  மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும். 
எடை குறைவான, இறுக்கம் இல்லாத, கதர் அல்லது பருத்தி ஆடைகளை அணிவது, கண்களுக்குப் பாதுகாப்பு கண்ணாடி மற்றும் வெயிலில் செல்லும்போது குடை மற்றும் கால்களுக்கு காலணிகள் அணிந்து செல்ல வேண்டும்.
வெளியில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும்போது வெளிப்புறங்களில் கடினமான வேலைகளை செய்வதை தவிர்க்கவும். மது அருந்துவது, டீ, காபி, கார்போ ஹைட்ரேட் குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்ப்பது நல்லது. இது உடம்பில் உள்ள நீர்ச் சத்தை குறைக்கும்.
உப்புக் கரைசல் நீர், வீட்டில் தயாரிக்கப்பட்ட நீர் ஆகாரம், எலுமிச்சை பானம், லெஸி மற்றும் மோர் ஆகியவை உடம்பில் உள்ள நீர் சத்தை அதிகப்படுத்துவதால் இதை அதிகமாகப் பருக வேண்டும். புரதச்சத்து அதிகமாக உள்ள உணவு மற்றும் பழைய உணவுப் பொருள்களை உள்கொள்வதை தவிர்க்க வேண்டும். வெயிலில் வேலை செய்பவர்கள் தலைக்கு தொப்பி மற்றும் ஈரத்துணியை கழுத்து, முகம், மூட்டு பாகங்களில் அணிந்து வேலை செய்தல் வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில் குழந்தைகளையோ, செல்லப் பிராணிகளையோ தனியே விட்டு செல்லக்கூடாது. வெயிலால் தலை சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
மின் விசிறி மற்றும் ஈரத் துணிகளைப் பயன்படுத்துதல் வேண்டும். குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். வீட்டை குளிர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைக்கவும். வீட்டில் உள்ள கால்நடைகளை நிழலான இடத்தில் பராமரித்து அவைகளுக்கு தேவையான தண்ணீர் அடிக்கடி கொடுக்கப்பட வேண்டும் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com