பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறினார்.
கடலூர் ஊராட்சி ஒன்றியம், உச்சிமேடு ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்புப் பார்வையாளராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பேசியதாவது: குடும்பத்தில் பெண் ஒருவர் கல்வி பெற்றால் அந்தக் குடும்பமே முன்னேறுவதுடன், சமுதாயமும் முன்னேற்றமடையும். எனவேதான் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார். பெண்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும். பெண்களின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றமாகும்.
கடந்த காலத்தைக் காட்டிலும் மழை அளவு தற்போது குறைந்துள்ளது. எனவே கிடைக்கும் தண்ணீரை மிக சிக்கனமாக பயன்படுத்துவதுடன் நீரைச் சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இளைய சமுதாயத்துக்கும் நீரின் தேவையை உணர்த்தி அவர்களுக்கும் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திட வேண்டும். மாவட்டத்தில் 792 ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் நாம் நீரை சேமிப்பதுடன் விவசாய பெருமக்களுக்கு வண்டல் மண் கிடைக்கப்பெறும். நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ளதால் மாற்று பொருள்களை பொதுமக்கள் பயன்படுத்திட வேண்டும்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் இணையாத விவசாயிகள் விரைந்து அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர். கூட்டத்தில், நெகிழி பயன்பாடு தவிர்ப்பு தொடர்பாக உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியன், கடலூர் வட்டாட்சியர்
கோ.செல்வகுமார் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.