கடலூர்

வீரட்டானேஸ்வரர் கோயிலில் சிவனிரவு பெருவிழா

31st Jul 2019 07:57 AM

ADVERTISEMENT

பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோயிலில் 308-ஆவது மாத சிவனிரவு பெருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
கோவை பேரூராதீனம் சாந்தலிங்கர் அருள் நெறிமன்றம், விழுப்புரம் பேரூர் ஞானாம்பிகை அருள்நெறி மன்றம் மற்றும் விழுப்புரம் மாவட்ட வீர சைவ சிவஞானியார் திருக்கூட்டம் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு, உமையொருபாகன் கயிலைநாதன் தலைமை வகித்தார். 
விழாவை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் இடபக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருநாவுக்கரசு வழித்தோன்றல் எலந்தம்பட்டு அருணாசலம் இடபக்கொடியேற்றினார். மாலை 5.30 மணி முதல் இட்டலிங்க மற்றும் ஆதமலிங்க மூர்த்திகளுக்கு திருமஞ்சன ஆராதனை வழிபாடுகள், திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு ஆகியவை நடைபெற்றன. விழாவில், சிவனடியார்கள் திரளானோர் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு திருநீற்று பிரசாதம் வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருமுறை இல்லம் ஆசி.ப.ஆடியபாதம், திருவதிகை திலகவதியார் திருநாவுக்கரசு சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT