கடலூர்

நீர்நிலைகளைத் தூர்வார இளைஞர்கள் முன்வர வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

31st Jul 2019 07:58 AM

ADVERTISEMENT

கடலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளைத் தூர்வாருவதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அழைப்பு விடுத்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை, உள்ளாட்சி, பேரூராட்சிகள் கட்டுப்பாட்டில் உள்ள 792 ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளை தூர்வாரி, அதில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்து பயன்படுத்தும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  
 மேலும், குடிமராமத்து பணிகள் நடைபெறும் 36 நீர்நிலைகளிலும் நீரைச் சேமிக்க மாவட்ட நிர்வாகத்தால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில், 20,330 கன மீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்
டுள்ளது.  
மேலும், ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் பொதுப் பணித் துறையின் 80 நீர்நிலைகளிலும், ஊரக வளர்ச்சித் துறையின் 1363 நீர்நிலைகளிலும் தூர்வார மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
மாவட்ட நிர்வாகத்தின் மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்புக் குறித்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரலாம்.
இதுவரை அரசுத் திட்டங்கள் மூலம் தூர்வாரப்படாமல் இருக்கும் நீர்நிலைகளை தூர்வார விரும்பும் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரும் பட்சத்தில் உடனடியாக அனுமதி வழங்கப்படும். 
எனவே, நீர்நிலைகளை தூர்வாரி மழைநீரைச் சேமிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT