கடலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வழங்கினார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 396 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், புவனகிரி வட்டம், சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் மகன்கள் பரணிதரன், தரணிதரன் மற்றும் பாலகிருஷ்ணன் மகன் புவியரசன் ஆகியோர் கடந்த ஜூன் 3-ஆம் தேதி ஏரியில் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தமைக்காக அவர்களது குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சத்தை ஆட்சியர் வழங்கினார்.
சிதம்பரம் வட்டம், மேலமூங்கிலடி கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் மகன் பாலமுருகன், பள்ளியில் வழிபாட்டு நிகழ்ச்சியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தமைக்காக அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.
மேலும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கக்கூடிய மாற்றுத் திறனாளி உதவித் தொகைக்கான ரூ.ஆயிரம் வழங்குவதற்கான ஆணையை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட
வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் வீ.வெற்றிவேல், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) எஸ்.பரிமளம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜஸ்ரீ, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
விவசாயி தீக்குளிக்க முயற்சி: குறைதீர் கூட்டத்தில், மனு அளித்துவிட்டு வெளியே வந்த கிள்ளை அருகே உள்ள தில்லைவிடங்கனைச் சேர்ந்த விவசாயி மகேந்திரன் (51) என்பவர், தான் மறைத்து வைத்திருந்த சிறிய அளவிலான புட்டியில் இருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றினார். அங்கிருந்த போலீஸார் விரைந்து செயல்பட்டு அவரை மீட்டனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், கிள்ளை அருகே சுமார் 400 ஏக்கருக்கு பாசன வசதி அளிக்கும் சின்ன வாய்க்காலை தூர் வார வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல காவல் துறையினருக்கும் வாரம் ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக கடந்த 6 மாதங்களாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால் தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார். அவரை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.