கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் கடலூரில் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் மற்றொரு மாவட்டத்துக்குச் சென்று ஆய்வு செய்வதை நிறுத்த வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் சட்டத்துக்குப் புறம்பாக புரோக்கர்கள் நியமிக்கப்பட்டு பணியாளர்களிடமிருந்து மாதாந்திர கப்பம், இடமாறுதல், கடை மாறுதல் ஆகியவற்றுக்கு பணம் பெறுவதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆய்வு என்ற பெயரில் நெருக்கடி கொடுப்பதை தடுக்க வேண்டும். ஆய்வுகளுக்கு கடைப் பணியாளர்களை பயன்படுத்தக் கூடாது. டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சிலர் வெளியாள்களைக் கொண்டு ஆய்வு என்ற பெயரில் பணம் வசூல் செய்து வருவதை தடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.அல்லிமுத்து தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் செயல் தலைவர் கு.சரவணன், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் கோ.சீனுவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஏ.வி.விவேகானந்தன், நிர்வாகிகள் எஸ்.கோபால்சாமி, டி.ராஜேஷ் மற்றும் டாஸ்மாக் பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.