அங்கன்வாடி மையங்களில் வருகைப் பதிவேடு, பணிப் பதிவேடு ஆகியவை அறிதிறன் செல்லிடப்பேசி (ஸ்மார்ட்போன்) மூலம் நடைபெற்று வருகிறது.
மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் கடலூர் மாவட்டத்தில் 2,023 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, 2 வயது முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குதல், அடிப்படை கல்வி போதித்தல் பணிகளுடன், கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவு அளித்தல், மாதாந்திர எடை பராமரிப்பு, வளரிளம் பெண்களுக்கு சத்துணவு அளித்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது, மத்திய அரசு தேசிய சரிவிகித சத்துணவு இயக்கத்தை (சசங) போஜான் அபியான் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, அனைத்து அங்கன்வாடி மையங்களின் பொறுப்பாளர்களுக்கும் தற்போது அறிதிறன் செல்லிடப்பேசி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக அங்கன்வாடி மையங்களின் பொறுப்பாளர்கள் தினமும் அங்கன்வாடிக்கு வந்துள்ள குழந்தைகளை அவர்கள் சாப்பிடும்போது படம் பிடித்து அனுப்ப வேண்டும்.
இதனால், அங்கன்வாடிக்கு எத்தனை குழந்தைகள் வருகிறார்கள் என்ற விவரம் முழுமையாக பதிவாகும்.
மேலும், அவர்களுக்கென அளிக்கப்பட்ட பிரத்யேக செயலி (ஆப்) மூலம் சில விவரங்களை பதிவு செய்வதால், தற்போது பராமரித்து வரும் 11 பராமரிப்பு ஏடுகளை கையாள வேண்டியதில்லை. எனவே, அவர்களுக்கான பணிப் பளு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட இயக்குநர் த.பழனி கூறியதாவது: போஜான் அபியான் திட்டத்தின் கீழ் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு 21 வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதில், அவர்கள் முதலில் தங்களது அங்கன்வாடிக்கு உள்பட்ட பகுதியின் வரைபடத்தை தயாரிக்க வேண்டும். பின்னர், தங்களது பகுதிக்குள்பட்ட வீடுகளுக்குச் சென்று, அங்குள்ள குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் கணக்கு காட்டப்பட்டு சிலரது வீடுகளுக்கு சத்துணவு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், தற்போது குழந்தைகள் அனைவரும் அங்கன்வாடிக்கு வர வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இதற்காக, குழந்தைகளின் பெற்றோருடன் கலந்தாய்வுக் கூட்டமும் நடத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தும் அங்கன்வாடிப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மாதம்தோறும் ரூ.500 பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்றார் அவர்.