சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலைப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் (Rank List) திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு இளம் அறிவியல் வேளாண்மை (B.Sc. (Hons.) Agriculture) படிப்புக்கு 12,374 விண்ணப்பங்களும், இளம் அறிவியல் வேளாண்மை (B.Sc.(Hons.) Agriculture (Self Supporting) படிப்புக்கு 3,281 விண்ணப்பங்களும், இளம் அறிவியல் தோட்டக்கலை (B.Sc.
(Hons.) Horticulture) படிப்புக்கு 1,763 விண்ணப்பங்களும் வரப்பெற்றன.
அவற்றில் இளம் அறிவியல் வேளாண்மை பிரிவில் 303 விண்ணப்பங்களும், இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி) பிரிவில் 82 விண்ணப்பங்களும், தோட்டக்கலைப் பிரிவில் 25 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.
வேளாண் பட்டயப் படிப்புக்கு 1,214 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 35 விண்ணப்பங்களும், தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கு 599 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 20 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. இந்த படிப்புகளுக்கு "சமவாய்ப்பு' எண்கள் (ரேண்டம் நம்பர்) 15.07.2019 அன்று வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், இளம் அறிவியல் வேளாண்மை, இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி), இளம் அறிவியல் தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை, திங்கள்கிழமை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் வே.முருகேசன் வெளியிட்டார். மாணவர்கள் www.annamalaiuniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் மூலம் தங்களது தரவரிசையை தெரிந்து கொள்ளலாம்.
பின்னர் துணைவேந்தர் வே.முருகேசன் கூறியதாவது:
மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். மாணவர்கள் மேல்நிலை படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிப்படியும் சேர்க்கைக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
கலந்தாய்வு நடைபெறும் நாள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இதுகுறித்த விவரம் குறுந்தகவல் மூலமாகவும் அனுப்பப்படும். கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்தாய்வுக்கான அனுமதி கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்றார் அவர்.
கூடுதல் விவரங்களுக்கு மேற்கூறிய பல்கலைக்கழக இணையதள முகவரி, auadmissions2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி, உதவி மைய தொலைபேசி எண் (04144-238349) ஆகியவற்றில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளர் என்.கிருஷ்ணமோகன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி செல்வநாராயணன், மாணவர் சேர்க்கை ஆலோசகர் டி.ராம்குமார், வேளாண்புல முதல்வர் சாந்தாகோவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.