கடலூர்

வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம்

27th Jul 2019 10:15 AM

ADVERTISEMENT

பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழாவையொட்டி வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. 
 இந்தக் கோயிலில் நடைபெறும் விழாக்களில் வைகாசி பிரம்மோத்ஸவம், ஆடிப்பூர பிரம்மோத்ஸவம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றவையாகும். நிகழாண்டு ஆடிப்பூர பிரம்மோத்ஸவத் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, காலை 6 மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மூலவர் பெரியநாயகி அம்பாள் வெள்ளி அங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து, உற்சவர் பெரியநாயகி அம்பாள் கொடிமரம் அருகே எழுந்தருளினார். இதையடுத்து, சிவாச்சாரியார்கள் காலை 8.30 மணியளவில் கொடியேற்றினர். பின்னர், உற்சவர் அம்பாள் 2-ஆம் பிரகார மாட வீதியில் உலா வந்தார். நிகழ்ச்சியில், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 விழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலையில் மாட வீதியில் உலாவும் நடைபெறும். விழாவின் 9-ஆம் நாளில் (ஆக.3) ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT