கடலூர்

சாலைப் பணிக்கு நிலம் கையகப்படுத்தியதில் அதிருப்தி: அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்

27th Jul 2019 10:11 AM

ADVERTISEMENT

காட்டுமன்னார்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பணிக்கு நிலம் கையகம் செய்தது தொடர்பாக அதிருப்தி தெரிவித்து அதிகாரிகளை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். 
 திருச்சி - சிதம்பரம் இடையிலான தேசிய நெடுஞ்சாலை சுமார் 138 கி.மீ. நீளம் கொண்டது. இதில் சிதம்பரத்திலிருந்து மீன்சுருட்டி வரையுள்ள 34 கி.மீ.தொலைவு சாலையை அகலப்படுத்த கடந்த 2 ஆண்டுகளாக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குமராட்சி பகுதியில் எள்ளேரி, வீரநத்தம் மற்றும் குறுங்குடி, கண்டமங்கலம், வீராணநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில்  நிலம் கையகப்படுத்தியதில் அதிகாரிகள் முறையாகச் செயல்படவில்லை என்றும், இழப்பீட்டு தொகைக்கான கணக்கீட்டில் அலட்சியம் காட்டுவதாகவும் விவசாயிகள் புகார் கூறினர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் முறையிட்டும் முறையாக பதில் அளிக்கப்படவில்லையாம். 
 இந்த நிலையில், நகாய் என்று அழைக்கப்படும் நேஷனல் ரோடு அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தின் சென்னை மண்டல அதிகாரி பவுன்குமார் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் வீராணநல்லூர்  பகுதிக்கு வந்தனர். அவருடன்  விழுப்புரம் நகாய் திட்ட அலுவலர் சிவாஜி, மாவட்ட வருவாய் அலுவலர் மங்களம் ஆகியோரும் உடனிருந்தனர். இதுகுறித்து ஏற்கெனவே தகவலறிந்த விவசாயிகள் வீராணநல்லூர்  கிராமத்தில் விளைநிலங்களில் கருப்பு கொடிகளை ஏற்றிவைத்தனர். மேலும், அதிகாரிகளை முற்றுகையிட்டு, தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலத்துக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். 
 இதற்கு பதில் அளித்த பவுன்குமார், அருகில் உள்ள நிலங்களுக்கு எவ்வளவு  இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். மேலும், சாலைப் பணியை மாற்றம் செய்வது சாத்தியமில்லை என்ற அவர், குறிப்பிட்ட சில அடிகளுக்கு மட்டுமே மாற்ற முடியும் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை பணிகள் நடைபெற அனுமதிக்கமாட்டோம் என்று வீராணநல்லூர் கிராம விவசாயிகள் 
தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT