கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு திங்கள்கிழமை தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து விலக்கி, மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற ஜனநாயக அமைப்புகள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அஞ்சல் துறை தேர்வை தமிழ் உள்ளிட்ட அனைத்துப் பிராந்திய மொழிகளிலும் எழுதிட அனுமதி வழங்க வேண்டும்.
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யும் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். அரசியல் தளத்தில் சாதிய, மதவாத சக்திகள் வலிமை பெற்று வருவதால், பிற்போக்குத்தனமான ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன.
இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் தயா.தமிழன்பன், மண்டலச் செயலர் சு.திருமாறன், நிர்வாகிகள் பா.குணத்தொகையன், திராவிடமணி, குமார், தொண்டரணியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், ஒன்றிய இணைச் செயலர் முருகானந்தம், நகரச் செயலர் கவுதமன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.