ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என சிஐடியூ மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியூ) கடலூர் மாவட்ட 12-ஆவது மாநாடு கடலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வுக்கு, மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தார். ஈஐடி பாரி சங்கச் செயலர் ஆர்.வி.சுப்பிரமணியன் கொடியேற்றி வைத்தார்.
மாநாட்டை தொடக்கி வைத்து மாநில உதவிப் பொதுச் செயலர் வி.குமார் சிறப்புரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலர் பி.கருப்பையன், வரவு-செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் ஜி.குப்புசாமி ஆகியோர் சமர்ப்பித்தனர்.
மாநில துணைத் தலைவர் கே.விஜயன், விவசாய சங்க மாவட்டச் செயலர் கோ.மாதவன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலர் எஸ்.பிரகாஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநாட்டில், மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக, மத்திய அரசு மேற்கொள்ளும் ஆய்வுகளை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும்.
முறைசாரா தொழிலாளர்களுக்கு தேசிய நிதியத்திலிருந்து 3 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நல வாரியத்தில் பதிவு பெற்ற முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரமும், பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதில் ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நலச் சலுகைகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஓய்வூதியமும் வழங்கப்படாமல் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். என்.எல்.சி.யில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாநிலக் குழு உறுப்பினர் ஏ.வேல்முருகன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்பு குழுச் செயலர் டி.பழனிவேல் வரவேற்றார்.
மாநாட்டில் சனிக்கிழமை நடைபெறும் நிகழ்வில் சிஐடியூ மாநில பொதுச் செயலர் ஜி.சுகுமாரன் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.