விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு மற்றும் மதிப்புக் கூட்டுதல் குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் சு.கண்ணன் தலைமை வகித்து, காளானின் மருத்துவ குணங்கள், அதிலுள்ள ஊட்டச் சத்துகள், பதப்படுத்தும் முறை, மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரித்தல், அதை சந்தைப்படுத்துதல் குறித்து விளக்கிப் பேசினார்.
பயிர் பாதுகாப்பு உதவிப் பேராசிரியர் சு.மருதாச்சலம் பங்கேற்று, சிப்பி மற்றும் பால் காளான் வளர்ப்பின் முக்கியத்துவம், படுக்கை தயாரிப்பு முறை, அறுவடை செய்யும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார். உழவியல் உதவிப் பேராசிரியர் வெங்கடலட்சுமி, விதை நுட்பவியல் முனைவர் க.நடராஜன், மண்ணியல் பொற்கொடி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முகாமில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 53-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், விவசாயிகள் கலந்துகொண்டனர்.