கடலூர்

ஆனித் திருமஞ்சன தரிசனம்: அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம்  

4th Jul 2019 08:44 AM

ADVERTISEMENT

சிதம்பரம் நடராஜர் கோயிலில் வருகிற 7, 8-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஆனித் திருமஞ்சன தேர், தரிசன திருவிழாவை முன்னிட்டு, அனைத்துத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு சார்- ஆட்சியர் விசுமகாஜன் தலைமை வகித்துப் பேசியதாவது: சிதம்பரம் நடராஜர் கோயிலில் வருகிற 7-ஆம் தேதி தேரோட்டமும், 8-ஆம் தேதி ஆனித் திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகிறது.
 இதையொட்டி, பாதுகாப்பு, சுகாதார வசதி, போக்குவரத்தை மாற்றம் செய்வது குறித்து தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
 தரிசனத்தின் போது, நான்கு மாட வீதிகளிலும் குப்பைகளை அகற்றி, தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
 மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகளை 2 நாள்களுக்கு மூட வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கோயிலின் உள்புறம் 10-க்கு மேற்பட்ட இடங்களில் குடிநீர் வசதி செய்ய வேண்டும்.
 தடையில்லா மின்சாரம், நடமாடும் ஆம்புலன்ஸ் வசதி செய்ய வேண்டும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக சார்- ஆட்சியர் விசுமகாஜன் தெரிவித்தார்.
 கூட்டத்தில் சிதம்பரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
 கூட்டத்தில் வட்டாட்சியர் ஹரிதாஸ், நகராட்சிப் பொறியாளர் மகாதேவன், நகரக் காவல் ஆய்வாளர் சி.முருகேசன், காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன், உதவி மின் பொறியாளர்கள் சுதா.சதீஷ், உணவுப் பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் பாஸ்கர், நடனசபாபதி, நவமணி, வர்த்தக சங்கத் தலைவர் சதீஷ், கோயில் பாதுகாப்புக் குழுத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் தீயணைப்புத் துறை,பொதுப் பணித் துறை, மின் வாரியம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT