கடலூர்

அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: ஊழியர்கள் சாலை மறியல்

4th Jul 2019 08:39 AM

ADVERTISEMENT

திட்டக்குடியில் அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டதால், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 கடலூர் மாவட்டம், பெண்ணாடத்திலிருந்து திட்டக்குடிக்கு புதன்கிழமை காலை அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் மணி ஓட்டிச் சென்றார். கூடலூர் அருகே சென்ற போது, அரசுப் பேருந்தை தனியார் பேருந்து ஒன்று முந்திச் செல்ல முயன்றதாம். அப்போது, தனியார் பேருந்தின் நடத்துநர் செல்வராஜ், அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மணியை தகாத வார்த்தைகளால் பேசியதாகத் தெரிகிறது. இதனால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.
 இதைத் தொடர்ந்து, திட்டக்குடி பேருந்து நிலையத்திலும் இரண்டு பேருந்துகளின் ஊழியர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 தகவலின் பேரில், இரண்டு பேருந்துகளின் ஊழியர்களையும் போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனராம். அங்கு, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை மட்டும் இருக்கச் செய்து, தனியார் பேருந்து ஊழியர்களை வெளியே அனுப்பிவிட்டதாகத் தகவல் பரவியது.
 இதனால், அரசுப் பேருந்து ஊழியர்கள் திட்டக்குடி பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தவிட்டு, தனியார் பேருந்து ஊழியர்களை கைது செய்யக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 தகவலறிந்து வந்த திட்டக்குடி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் குணசேகரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், ஓட்டுநர் மணி அளித்த புகாரின் பேரில், செல்வராஜ் (49) மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனர். இதையடுத்து, அரசுப் பேருந்துகளை அதன் ஓட்டுநர்கள் வழக்கம் போல இயக்கினர். இதனால், அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT