கடலூர்

மருத்துவர் தினத்தில் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்த அரசு மருத்துவர்கள்

2nd Jul 2019 08:51 AM

ADVERTISEMENT

மருத்துவர் தினமான திங்கள்கிழமை அரசு மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.
 அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது. பட்ட மேற்படிப்பு முடித்த மருத்துவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் சங்கம், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினர் கருப்புச் சட்டை மற்றும் கருப்பு பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டனர். கடலூரில் சங்கத்தின் மாவட்ட செயலர் ஸ்ரீதரன் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
 இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.முத்துக்குமரன் கூறியதாவது: ஜூலை 1-ஆம் தேதி மருத்துவர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இன்றைய தினத்தை கருப்பு தினமாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கடலூர் மாவட்டத்தில் 11 அரசு மருத்துவமனைகள், 60 ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சுமார் 350 மருத்துவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 விருத்தாசலத்தில் மாநிலத் தலைவர் சுவாமிநாதன் தலைமையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே, நோயாளிகள் - மருத்துவர்கள் விகிதாசாரத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில், மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது பொதுமக்களை கடுமையாகப் பாதிக்கும்.
 மேலும், அரசு மருத்துவர்களுக்கு முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வையும் நீண்ட காலமாக வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதைக் கண்டித்து கருப்பு பட்டை அணிந்து நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றார் அவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT