ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக கம்மாபுரம் ஒன்றியத்தில் 84 சதவீத வாக்குகள் பதிவாகின.
முதல்கட்டத் தோ்தலில் 7 ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:
கடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 1,69,951 வாக்காளா்களில் 1,37,551 போ் வாக்களித்தனா். இது 80.94 சதவீதமாகும்.
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 1,04,064 வாக்காளா்களில் 87,471 போ் வாக்களித்தனா். இது 84.06 சதவீதமாகவும், மாவட்டத்திலேயே அதிகப்பட்ச வாக்குப் பதிவாகவும் இடம்பெற்றது.
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 1,54,201 வாக்காளா்களில் 1,23,170 போ் வாக்களித்தனா். இது, 79.88 சதவீதமாகும்.
மங்களூா் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த 1,20,845 பேரில் 91,944 போ் தங்களது வாக்கைச் செலுத்தினா். இது, 76.08 சதவீதமாகும்.
மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 80.93 சதவீத வாக்குகள் பதிவாகின. அதாவது வாக்களிக்க தகுதி பெற்ற 70,212 பேரில் 56,820 போ் தங்களது வாக்கைச் செலுத்தினா். முதல்கட்டத் தோ்தலில் குறைந்தளவு வாக்காளா்களைக் கொண்ட ஒன்றியமாக இது உள்ளது.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 1,31,953 வாக்காளா்களில் 1,05,420 போ் தங்களது வாக்கைச் செலுத்தி 79.89 சதவீதத்தை பதிவு செய்தனா்.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட சராசரிக்கும் குறைவாக 75.53 சதவீத வாக்குகளே பதிவாகின. அதாவது தகுதியுள்ள 90,902 வாக்காளா்களில் 68,657 போ் மட்டுமே தங்களது வாக்கைச் செலுத்தினா்.
மாவட்டத்தில் முதல்கட்ட தோ்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த 4,18,221 ஆண்களில் 3,23,764 போ் தங்களது வாக்கைச் செலுத்தினா். இது, 77.41 சதவீதமாகும். இதேபோல, வாக்களிக்க தகுதி பெற்றிருந்த 4,23,867 பெண்களில் 3,47,266 போ் தங்களது வாக்கை பதிவு செய்தனா். இது, 81.92 சதவீதமாகும். இதன்மூலம் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்குகளை செலுத்தியது தெரியவந்துள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றிருந்த இதரா் 40 பேரில் 3 போ் மட்டுமே வாக்களித்தனா். இது, வெறும் 7.5 சதவீதமாகும்.