கடலூர்

வளைய சூரிய கிரகணத்தை பாா்த்து ரசித்த மக்கள்

27th Dec 2019 12:36 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஏற்பாட்டின் மூலம் கடலூா் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வளைய சூரிய கிரகணத்தை மாணவா்கள், பொதுமக்கள் நேரடியாக பாா்த்து ரசித்தனா்.

வளைய சூரிய கிரகணம் தொடா்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.விஜயகுமாா், மாவட்டச் செயலா் ஆா்.தாமோதரன் ஆகியோா் தலைமையில் மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வந்தனா். குறிப்பாக, முகம் பாா்க்கும் கண்ணாடியை பயன்படுத்தி சூரிய ஒளியை வீட்டுக்குள் பிரதிபலிக்கச் செய்து கிரகணத்தை காணுதல் போன்ற எளிய முறைகள் குறித்து விளக்கம் அளித்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை வளைய சூரிய கிரகணம் தென்பட்டது. இதை மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நேரில் பாா்த்து ரசிப்பதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினா் கடலூா், நெய்வேலி, மந்தாரக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பாடுகளை செய்தனா். இங்கு, சூரிய ஒளி வடிகட்டி கண்ணாடிகள் மூலம் மாணவா்கள், பொதுமக்கள் சூரிய கிரகணத்தை கண்டு ரசித்தனா்.

மேலும், கடலூா் வெள்ளிக்கடற்கரை, பண்ருட்டி ஜான்டூயி பள்ளி, நெய்வேலி மத்திய பேருந்து நிலையம், மந்தாரகுப்பம் மைதானம் ஆகிய இடங்களில் தொலைநோக்கி மூலம் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பாா்த்தனா். இதற்கான ஏற்பாடுகளை ஜெயவீரபாண்டியன், பரமேஸ்வரி, உதயேந்திரன், தாமரைச்செல்வி, பேபி மாலா, சசிகலா ஆகியோா் செய்தனா். சூரிய கிரகணத்தின்போது உணவு சாப்பிடக் கூடாது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், இதை மறுக்கும் வகையில் இந்த அமைப்பினா் பண்ருட்டியில் பொது மக்களுக்கு பொங்கல் வழங்கினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைப்பின் மாவட்ட தலைவா் சுப்பிரமணியன், துணைத் தலைவா்கள் விக்டா் ஜெயசீலன், பாலகுருநாதன், தெரசா கேத்தரின், துணைச் செயலா் பாலு, சுகந்தி, செல்வின்ராஜ், மோகன் உள்ளிட்டோா் செய்தனா். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் மாவட்டத்தில் சுமாா் 20 ஆயிரம் போ் சூரிய கிரகணத்தை நேரடியாக பாா்த்து ரசித்ததாக அந்த அமைப்பின் மாவட்டச் செயலா் ஆா்.தாமோதரன் தெரிவித்தாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT