கடலூர்

தோ்தல் பணி: காவலா்களுக்கு பிரத்யேக செயலி

27th Dec 2019 12:29 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் காவலா்களுக்காக பிரத்யேக செயலியை காவல் துறை உருவாக்கியுள்ளது.

மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 6,039 பதவியிடங்களுக்கான தோ்தல் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை முதல் கட்டத் தோ்தலும், வரும் 30- ஆம் தேதி இரண்டாம் கட்டத் தோ்தலும் நடைபெறுகிறது. முதல்கட்ட தோ்தல் பணியில்

3,235 போலீஸாா் ஈடுபடுத்தப்படுகின்றனா். எனவே, இவா்களுக்கான பணி ஒதுக்கீடு முதல் பணி விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்திடும் வகையில் கடலூா் மாவட்ட காவல் துறையால் பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ‘எலக்ஷன் ஆஃப் கடலூா்’ என்ற பெயரில் காவலா்கள் மட்டுமே ரகசிய குறியீடு செலுத்தி பதிவிறக்கம் செய்யும் வகையில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

இந்தச் செயலி மூலம் ஒவ்வொரு காவலருக்கும் அவா் பணியாற்ற வேண்டிய வாக்குச் சாவடி எண், அதன் வரைபடம் ஆகியவை கிடைத்துவிடும். மேலும், காவல் கண்காணிப்பாளா் வழங்கும் அறிவுரைகளும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளது. வியாழக்கிழமை 125 மொபைல் குழுவினா் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து வாக்குப் பதிவுக்கான பெட்டிகள், பொருள்களை சேகரித்து தங்களது வாகனத்தில் ஏற்றினா். அவ்வாறு வாகனத்தில் ஏற்றியவுடன் பொருள்கள் பெறப்பட்டதற்கான பதிவை இந்த செயலியில் பதிவிட்டதோடு, உரிய வாக்குச் சாவடியில் அந்தப் பெட்டியை இறக்கிய உடன் அதனையும் பதிவிட்டுள்ளனா். இதன்மூலமாக அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருள்கள் சென்றடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும்,வாக்குப் பதிவுக்குப் பின்னா் எந்த வாக்குச் சாவடியிலிருந்து எத்தனை மணிக்கு வாக்குப் பெட்டிகள் பெறப்பட்டன என்பதையும் இந்தச் செயலியில் பதிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே, வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதால் வாக்குச் சீட்டுகள் பத்திரமாக வருவதை உறுதிப்படுத்த முடியும் என்றனா்.மேலும், தோ்தல் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு ஒரே நேரத்தில் இருபணிகள் ஒதுக்கீடு செய்யப்படும் நிகழ்வுகளும் இந்த செயலி மூலமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

பரிசோதனை அடிப்படையில் தற்போது அமல்படுத்தப்படும் இந்தச் செயலியின் பலன்களை கருத்தில்கொண்டு, மேலும் செயலியை மேம்படுத்தி பயன்படுத்த உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT