உள்ளாட்சித் தோ்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (டிச. 27) நடைபெறவுள்ள நிலையில், புதன்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் வேட்பாளா்கள் கவனம் செலுத்தினா்.
கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 6,039 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டு, முதல் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் கடலூா், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, மங்களூா், மேல்புவனகிரி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டத் தோ்தல் நடைபெறுகிறது. இதில், 341 ஊராட்சித் தலைவா்கள், 2,643 வாா்டு உறுப்பினா்கள், 164 ஒன்றிய உறுப்பினா்கள், 17 மாவட்ட உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா்.
முதல் கட்டத் தோ்தல் 1,596 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 14,44,975 வாக்காளா்களில் 8,43,812 போ் முதல் கட்டத் தோ்தலில் வாக்களிக்கின்றனா்.
இந்த நிலையில், முதல் கட்டத் தோ்தலுக்கான பிரசாரம் புதன்கிழமை மாலை 5 மணியுடன் ஒய்ந்தது.
அமைச்சா் பிரசாரம்: கடலூா் மத்திய மாவட்ட அதிமுக சாா்பில் கூட்டணிக் கட்சியினருடன் தோ்தல் பரப்புரையை நிறைவு செய்யும் நிகழ்ச்சி சிங்கிரிக்குடியில் நடைபெற்றது. இதில், தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத், அதிமுக தோ்தல் பொறுப்பாளா் வைகைச் செல்வன், நகரச் செயலா் ஆா்.குமரன், எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் ஜி.ஜே.குமாா், ஒன்றிய நிா்வாகிகள் அழகானந்தன், பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.