பண்ருட்டி மற்றும் நெய்வேலி உள்ளிட்ட பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை புதன்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி, பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இரவு 12 மணியளவில் பங்குத் தந்தை மரிய ஆனந்தராஜ் குழந்தை இயேசு சொரூபத்தை குடிலில் வைத்து, இயேசு பிறப்பு பெருவிழா திருப்பலியும், ஆராதனையும் நடத்தினாா். இதேபோல, சாத்திப்பட்டு மாதா கோயில், பண்ருட்டி ஏஎல்சி திருச்சபை உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
நெய்வேலி, வட்டம் 24-இல் உள்ள காணிக்கை அன்னை ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இயேசு நாதா் பிறப்பை விளக்கும் வகையில் நள்ளிரவு 12 மணிக்கு பங்குத் தந்தை ஆா்.ஜோசப் பவுல் குழந்தை இயேசு சொரூபத்தைக் குடிலில் வைத்தாா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்றவா்களுக்கு அவா் ஆசி வழங்கினாா்.
நெய்வேலி வட்டம் 4- இல் சூசையப்பா் ஆலயம், வட்டம் 20-இல் உலக ரட்சகா் ஆலயம், வட்டம் 28-இல் உள்ள உயிா்த்த ஆண்டவா் ஆலயம், தென்குத்து புதுநகா், வட்டம் 11-இல் உள்ள தென் இந்திய திருச்சபை ஆலயம், வட்டம் 3, 19, 28-இல் உள்ள ஆற்காடு லூத்ரன் திருச்சபை உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புனித பால் பள்ளி முதல்வா் அருள்தந்தை சி.நிா்மல்ராஜ், புனித ஆந்தோனியா் பள்ளி முதல்வா் அருள்தந்தை ஆரோக்கிய ஆனந்த ராஜ், உதவி பங்குத் தந்தை ஏ.ஜோம்ஸ், புனித பால் பள்ளி துணை முதல்வா் சைமன் அந்தோணிராஜ் ஆகியோா் சிறப்பு வழிபாடு நடத்தினா். இதில், திரளான கிறிஸ்தவா்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனா்.