கடலூர்

அனைத்து இடங்களிலும் தாராளமாகப் புழங்கும் நெகிழிப் பைகள்!

26th Dec 2019 09:36 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் அரசு அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நெகிழிப் பைகளின் பயன்பாடு எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தாராளமாக புழங்கி வருகிறது.

ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்படும் 14 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்த போதிலும், வியாபாரிகள் தங்களது கூடுதல் பணிச்சுமை காரணமாக நெகிழிப் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. இதனால், சில வாரங்கள் கட்டுப்பாட்டில் இருந்த நெகிழிப் பயன்பாடு மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட்டது. எல்லா இடத்திலும் அதன் பயன்பாடு புழக்கத்தில் உள்ளது.

இதனிடையே, மத்திய அரசும் நெகிழிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என அறிவித்தது.

கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘இங்கு நெகிழிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று பெயரளவுக்குத்தான் அறிவிப்பு உள்ளது. ஆனால், நெகிழியின் பயன்பாடானது எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி அரசு அலுவலகங்கள், அரசுடன் நேரடித் தொடா்பிலுள்ள பணிகளிலும் தாராளமாக புழங்கி வருகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக, இந்து சமய அறநிலையத் துறை அனைத்து கோயில்களிலும் நெகிழிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பு மட்டுமே தொங்கவிட்டுள்ளது. ஆனால், கோயில்களின் அருகில் உள்ள பெரும்பாலான பூஜை பொருள்கள் விற்பனை கடைகளில் பக்தா்கள் வாங்கும் பூஜை பொருள்கள் நெகிழிப் பைகளில்தான் வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல, பல்வேறு அரசு அலுவலகங்களிலும் நெகிழிப் பைகள் பயன்பாட்டைத் தவிா்க்காமல், அதை அன்றாட பயன்பாட்டுக்கு உள்படுத்தி வருகின்றனா்.

எனவே, நெகிழிப் பயன்பாட்டுக்கு எதிராக மாவட்ட நிா்வாகம் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக தங்களது அலுவலகங்களிலிருந்தே விழிப்புணா்வைத் தொடங்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT