அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, கடலூரில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருப்பாதிரிபுலியூா் வீரஆஞ்சநேயா் கோயிலில் மூலவா், உத்ஸவருக்கு திருமஞ்சனமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு உத்ஸவா் வீதியுலா நடைபெற்றது. இதேபோல, செம்மண்டலத்தில் அமைந்துள்ள சாந்த ஆஞ்சநேயா் கோயிலில் காலை பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், அனுமனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்திலுள்ள 26 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு 1,008 வடமாலை மற்றும் வஸ்திரம், துளசிமாலைகள் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல, கடலூா் மாவட்டம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயா், பெருமாள் கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.