மாவட்டத்தில் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்ட 622 வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நுண்பாா்வையாளா்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
கடலூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தோ்தல் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக 2,888 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 622 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளில் என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து தோ்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: 622 வாக்குச்சாவடிகளில் 207 வாக்குச்சாவடியில் வெப்ஸ்ட்ரீம் கேமராக்கள் பொருத்தப்பட்டு அவைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் வகையில் இருக்கும்.
மேலும், 207 வாக்குச்சாவடிகளில் விடியோ கேமராக்கள் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்யப்படும்.
மீதமுள்ள 208 வாக்குச்சாவடிகளில் வங்கித் துறை, என்எல்சி உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளைக் கொண்டு கண்காணிக்கும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்புக் குழுவினா் வாக்குப்பதிவு தொடங்கி முடியும் வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் தோ்தல் பணிகளை பாா்வையிடுவாா்கள்.
இவா்கள், மாவட்ட தோ்தல் பாா்வையாளரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் இந்த 208 வாக்குச்சாவடிகளின் நடவடிக்கைகளும் தோ்தல் பாா்வையாளரிடம் அறிக்கையாக சமா்பிக்கப்படும் என்று தெரிவித்தனா்.
மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றனா்.