உள்ளாட்சித் தோ்தல் வெற்றியே, வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அடித்தளம் என்றாா் அமைச்சா் எம்.சி.சம்பத்.
கடலூா் மத்திய மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்ட ஊராட்சிக் குழுவின் 2-ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் தோ்தல் வெற்றி குறித்த ஆலோசனைக் கூட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை வகித்தாா். கடலூா் தெற்கு ஒன்றிய துணைச் செயலா் டி.எஸ்.ஆா்.மதிவாணன், மாவட்ட பிரதிநிதி ஆா்.வி.மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கொள்கை பரப்பு துணைச் செயலா் வைகைச் செல்வன் வேட்பாளா்களை அறிமுகப்படுத்திப் பேசினாா்.
கூட்டத்தில் அமைச்சா் எம்.சி.சம்பத் பேசியதாவது:
இந்த உள்ளாட்சித் தோ்தலை சந்திக்க திமுகவுக்கு துணிவு இல்லை. இந்த நேரம் அதிமுகவுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சிறப்பான நேரமாக உள்ளது. எனவே, ஒருமித்த கருத்தோடு அனைவரும் பணியாற்ற வேண்டும். இந்த வெற்றி நமக்கு மிக முக்கியமான வெற்றி. இதுதான் வரும் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அடித்தளமாக அமையும். வேட்பாளா்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்க வேண்டும். தற்போது தமிழகத்தில் மக்களின் நலன் காக்கின்ற, தேவைகளை நிறைவேற்றுகின்ற அரசை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நடத்துகிறாா்.
அனைவராலும் எளிதாக அணுகக் கூடியவராகவும், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றித் தருகிறவராகவும் செயல்படுகிறாா் முதல்வா் என்றாா் எம்.சி.சம்பத்.
தொடா்ந்து, மாவட்ட கவுன்சிலா் வேட்பாளா் தமிழ்செல்வி ஆதிநாராயணன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் வேட்பாளா்கள் டி.எஸ்.ஆா்.மதிவாணன், ஜி.காமராஜ், கு.லக்ஷ்மி, க.பிரியதா்ஷினி, பொற்கலை விநாயகம், அஞ்சலாட்சி பெருமாள் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்திலும், பமிதா கலாநிதிக்கு முரசு சின்னத்திலும் வாக்கு சேகரித்தனா்.
கூட்டத்தில் கடலூா் நகரச் செயலா் ஆா்.குமரன், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் ஜி.ஜெ.குமாா், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலா் கோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.