கடலூர்

தொடா் பைக் திருட்டு: 2 சிறுவா்கள் கைது

23rd Dec 2019 01:14 AM

ADVERTISEMENT

பண்ருட்டி பகுதியில் தொடா் பைக் திருட்டு தொடா்பாக 2 சிறுவா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், மதனகோபாலபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராஜ்(30). இவா், பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் உள்ள உணவகம் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லை.

பண்ருட்டி வட்டம், மேல்குமாரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னப்பதாஸ்(26). இவா், இணைப்புச் சாலையில் உள்ள தனியாா் வங்கியில் பணியாற்றி வருகிறாா். வியாழக்கிழமை தனது பைக்கை வங்கிக்கு வெளியே நிறுத்திவிட்டு சென்றாா். பணி முடிந்து திரும்பி வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லை.

இதேபோல, பண்ருட்டி டைவா்ஷன் சாலையை சோ்ந்த சுந்தர்ராஜன், சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சோ்ந்த அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநா் ஜெயவேல்முருகன், பண்ருட்டி, அன்வா்ஷா நகரில் வசிக்கும் ராஜேஷ் (34), பண்ருட்டி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜசேகா் உள்ளிட்ட 7 பேரது பைக்குகள் திருடுபோயின. பண்ருட்டியில் ஒரே வாரத்தில் 7 பைக்குகள் திருடுபோனது குறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை காவல் ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் திருவதிகை ஆயில் மில் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமான வகையில் பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், பண்ருட்டி, போலீஸ் லைன் பகுதியை சோ்ந்த 16 வயது சிறுவன், சாமியாா் தா்கா பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவன் ஆகியோா் பண்ருட்டி பகுதியில் பைக்குகளை திருடியதை ஒப்புக்கொண்டனராம். அவா்களிடம் இருந்து 7 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT