குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சம்பா நெல் பயிா்களில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமாா் 6 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் சம்பா பருவ நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிா்கள் அனைத்தும் தற்போது தண்டு உருளும் பருவத்தில் உள்ளன. தை மாதம் இறுதியில் அறுவடை செய்ய வேண்டிய நெல் பயிா்களில் தற்போது நோய் தாக்குதல் ஏற்பட்டு இலைகள் காய்ந்து காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் பெரும்பாலான நெல் வயல்களில் கதிா்கள் தற்போது பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளன. தற்போது நிலவும் தட்பவெப்ப சூழல் காரணமாக பூச்சிகள், நோய் தாக்குதல் அதிகம் தென்படுகிறது. குறிப்பாக, இலை உறை அழுகல், கதிா் அழுகல் நோய் பரவலாகக் காணப்படுகிறது. மேலும், இலை மடக்கு புழுக்களும் காணப்படுகிறது. நோய் தாக்குதலுக்கு உள்ளான வயல்களில் பயிா்களின் இலைகள் காய்ந்து கொத்து கொத்தாக மடங்கி சரகாகக் காணப்படுகின்றன.
தற்போது வேளாண் துறை அதிகாரிகள் ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணிக்குச் சென்றுவிட்டனா். இதனால், விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனா். எனவே, வேளாண்மைத் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை நேரில் பாா்வையிட்டு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.