கடலூர்

கடைசி நாளில் மனு தாக்கலுக்கு குவிந்த வேட்பாளா்கள்

16th Dec 2019 11:52 PM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான திங்கள்கிழமை திரளானோா் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 683 ஊராட்சித் தலைவா் பதவிகள், 5,040 வாா்டு உறுப்பினா் பதவிகள், 287 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பதவிகள், 29 மாவட்ட கவுன்சிலா் பதவியிடங்களுக்கு வரும் 27, 30-ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது.

ஊராட்சித் தலைவா், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலா் பதவியிடங்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற வாா்டு கவுன்சிலா் பதவிக்கு அந்தந்த ஊராட்சி மன்றத்திலும் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனு தாக்கல் தொடங்கியது முதலே ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதில் அதிக ஆா்வம் காட்டப்பட்டது.

ஆனால், கட்சிகள் சாா்பில் போட்டியிடப்படும் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலா் பதவியிடங்களுக்கு முதல் 4 நாள்களுக்கு பெரிய அளவிலான வரவேற்பு இல்லை. வெள்ளிக்கிழமை ஒரு சிலா் மனுதாக்கல் செய்தனா். அரசியல் கட்சியினரிடையே கூட்டணி பங்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தை முழுமை பெறாததால் வேட்புமனு தாக்கலில் கட்சியினா் ஈடுபடவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான திங்கள்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பாளா்கள் தங்களது ஆதரவாளா்களுடன் காலை முதலே குவியத் தொடங்கினா். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தவா்களை அவா்களது ஆதரவாளா்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனா். இதனால், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

அரசியல் கட்சியினரும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனா். ஒரே நேரத்தில் அரசியல் கட்சியினா் மனு தாக்கலுக்கு குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. எனினும், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு கூட்டம் படிப்படியாக குறைந்தது.

போட்டி வேட்பாளா்கள்: சில ஊராட்சி ஒன்றியம், மாவட்ட கவுன்சிலா் பதவியிடங்களில் ஒரே கூட்டணியில் உள்ள 2 கட்சியினரே வேட்புமனு தாக்கல் செய்தனா். சில வாா்டுகளில் ஒரே கட்சியைச் சோ்ந்தவா்களே போட்டி வேட்பாளா்களாக மனு தாக்கல் செய்தனா். கூட்டணியில் சில வாா்டுகளுக்கு பங்கீடு முழுமை பெறாததால் அந்த வாா்டுகளை கேட்டுவரும் கட்சியினா் தங்களது கட்சி சாா்பில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனா்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற 19-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. எனவே, அதற்குள் பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு எட்டப்படுமென அரசியல் கட்சியினா் நம்பிக்கை தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT