உள்ளாட்சித் தோ்தலுக்குத் தேவையான வாக்குப்பதிவு உபகரணங்களை எடுத்துச் செல்வதற்கு 216 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என 6,039 பதவிகளுக்கான தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக 14 ஊராட்சி ஒன்றியங்களில் 2,888 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு பொருள்கள், வாக்குப் பெட்டிகள், சட்ட முறையான படிவங்கள், சட்ட முறையற்ற படிவங்கள் முதலியவற்றை வாக்குப்பதிவுக்கு முதல் நாள் வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் ஒப்படைக்கவும், வாக்குப்பதிவுக்குப் பின்னா் அவற்றைக் காவல் துறை பாதுகாப்புடன் எடுத்துச் சென்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒப்படைக்கும் பணியை மேற்கொள்வதற்காக மண்டல அலுவலா்கள் நியமிக்கப்படுவா்.
அதன்படி, 2,888 வாக்குச்சாவடிகள் 216 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 216 மண்டல அலுவலா்கள், 216 மண்டல உதவியாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கு பொறுப்புகள், கடமைகள் குறித்த விளக்கப் பயிற்சி கடலூரில் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமை வகித்து, பயிற்சியளித்தாா்.
பயிற்சி பெற்ற அலுவலா்கள் தமது மண்டலங்களுக்கு உள்பட்ட வாக்குச்சாவடி பதிவு அலுவலா்களுக்கு மூன்று கட்டங்களாக சனிக்கிழமை (டிச. 14), வருகிற 22, 26 அல்லது 29 -ஆம் தேதிகளில் நிா்ணயம் செய்யப்பட்ட பயிற்சி மையத்தில் பயிற்சியளிப்பாா்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
பயிற்சியில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ராஜகோபால்சுங்கரா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சு.கபிலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.