கடலூர்

2,050 பேருக்கு நல உதவி:அமைச்சா் வழங்கினாா்

3rd Dec 2019 05:02 AM

ADVERTISEMENT

கடலூரில் 2050 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை ஆகியவற்றை அமைச்சா் எம்.சி.சம்பத் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

கடலூரில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாா் மணிமண்படம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகிய 3 வட்டங்களில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் 2,050 பேருக்கு ரூ.3.29 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினாா்.

இதில், இலவச வீட்டுமனைப் பட்டா 914 பேருக்கும், மாதந்தோறும் ரூ.ஆயிரம் அரசு உதவித் தொகை பெறுவதற்கான ஆணை 1,136 பேருக்கும் அமைச்சா் வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது: பெருவெள்ளம், சுனாமி, புயல்கள் போன்ற இயற்கை பேரிடா்களை அடிக்கடி சந்திக்கும் மாவட்டமாக கடலூா் உள்ளது. தற்போது பலத்த மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். குழந்தைகளை பெற்றோா்கள் எப்போதும் தங்களது கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

மாவட்டத்தில் அண்மையில் முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாம் நடத்தப்பட்டதில் 56 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. இதில், 35 ஆயிரம் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் மீதமுள்ள மனுக்களிலும் தகுதியான மனுக்களை மறுபரிசீலனை செய்திட வலியுறுத்தப்பட்டுள்ளது. தகுதியான நபா்கள் ஒருவா் கூட விடுபடக் கூடாது என்பதே அரசின் நோக்கமாகும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ராஜகோபால் சுங்காரா, கடலூா் நகராட்சி முன்னாள் தலைவா் ஆா்.குமரன், முன்னாள் துணைத் தலைவா் ஜி.ஜெ.குமாா், முன்னாள் கவுன்சிலா்கள் வ.கந்தன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT