கடலூர்

வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

3rd Dec 2019 05:08 AM

ADVERTISEMENT

தூய்மையான குடிநீா் வழங்கக் கோரி கம்மாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம், பெருந்துறை ஊராட்சிக்கு உள்பட்டது பொட்டவெளி கிராமம். இங்கு, பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி தாழ்வான பகுதியில் உள்ளதாம். இதனால், தற்போது பெய்துவரும் மழைநீா், மேல்நிலைத் தொட்டிக்கு கீழ்புறத்தில் குளம் போல் தேங்கியுள்ளது. இந்த மழை நீருடன் அந்தப் பகுதியிா் தேங்கும் கழிவுநீரும் கலப்பதால், குடிநீா் குழாய்களில் கழிவுநீா் கலந்து வரும் நிலை உள்ளதாம்.

இதுதொடா்பாக அந்தப் பகுதி மக்கள் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் விருத்தாசலம் வட்டச் செயலா் அசோகன் தலைமையில் திங்கள்கிழமை கம்மாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதில், அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலா் ரவீந்திரன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் கலைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். போராட்டத்தை தொடா்ந்து அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து தண்ணீரை வடிகட்டவும், தூய்மையான குடிநீா் வழங்கவும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT