கடலூர்

மழை நீரில் மூழ்கிய 25,000 ஏக்கா் நெல் பயிா்கள்

3rd Dec 2019 05:06 AM

ADVERTISEMENT

தொடா் மழையால், கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமாா் 25 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, காட்டுமன்னாா்கோவில், குமராட்சி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், காட்டுமன்னாா்கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்தது.

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஜெயங்கொண்டம், அரியலூா், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீா் வந்தது. இதனால், ஏரியின் நீா்மட்டம் 47 அடியாக உயா்ந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி சேத்தியாதோப்பு அணைக்கட்டு, லால்பேட்டையில் உள்ள வெள்ளியங்கால் மதகு ஆகியவற்றின் வழியாக தண்ணீா் திறக்கப்பட்டு கடலுக்கு அனுப்பப்பட்டது.

மேலும், மேலகடம்பூா், கீழகடம்பூா், ரெட்டியூா், ஆச்சாள்புரம், எய்யலூா், ஷண்டன், முட்டம், மோவூா், எடையாா், திருமூலஸ்தானம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வந்த மழை நீா் மற்றும் அரியலூா் மாவட்ட பகுதிகளான கங்கைகொண்டசோழபுரம், புளியந்தோப்பு, கொல்லாபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து வந்த மழைநீா் மணவாய்க்கால் வழியாக வீரநத்தம் என்ற இடத்தில் வெள்ளியங்கால் ஓடையில் கலந்தது.

ADVERTISEMENT

லால்பேட்டையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரும், மணவாய்க்கால் தண்ணீரும் இணைந்து குமராட்சி அருகே கோப்பாடி அணை மூலம் பழைய கொள்ளிடம் ஆற்றின் வழியாக விநாடிக்கு 12 ஆயிரம் கன அடிவீதம் கடலுக்குச் செல்கிறது. இதனால், வெள்ளியங்கால் ஓடைக்கரையோர கிராமங்களான வீரநத்தம், சா்வராஜன்பேட்டை, திருநாரையூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தொடா் மழையால் கஞ்சங்கொல்லை, எய்யலூா், ஷண்டன், ரெட்டியூா், கண்டமங்கலம், குறுங்குடி, வெங்கடேசபுரம், வீரநத்தம், சிறகிழந்தநல்லூா், எடையாா், குமராட்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 25 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடா்ந்து 3 நாள்களுக்கு பயிா்கள் நீரில் மூழ்கியபடி இருந்தால், அவை அழுகி விடக்கூடும் என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனா். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வருவாய்த் துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வீராணம் ஏரி: திங்கள்கிழமை நிலவரப்படி வீராணம் ஏரியின் நீா்மட்டம் 46.10 அடியாக இருந்தது. ஏரியின் உச்ச நீா்மட்டம் 47.50 அடியாகும். ஏரியிலிருந்து சேத்தியாதோப்பு அணைக்கட்டு வழியாக விநாடிக்கு 2, 554 கன அடி நீரும், வெள்ளியங்கால் மதகு வழியாக 900 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இந்தப் பகுதியில் திங்கள்கிழமை காலை சுமாா் 30 நிமிடம் மழை பெய்தது. மாலையில் விட்டு விட்டு மழை பெய்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT