விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செப். 3-ஆம் தேதி நீர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளதாக திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணணன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செப். 3-ஆம் தேதி ஜல் சக்தி அபியான் திட்டத்தின் பயிர் சாகுபடியில் சிக்கன நீர் பாசனத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த வேளாண் உயரதிகாரிகள் கலந்து கொண்டு பயிற்சியளிக்க உள்ளனர். நுண்ணீர் பாசன நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டு செயல் விளக்கம் அளிக்கவுள்ளனர். மேலும் நுண்ணீர் பாசனத்தில் வெற்றி பெற்ற விவசாயிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
முகாமில் மழைநீர் சேகரிப்பு, நீர் நிலைகளைப் பாதுகாத்தல், நீர்வள ஆதாரங்களை மேம்படுத்துதல், அழியும் நிலையில் உள்ள நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல், குறைவான பாசன நீரில் அதிக மகசூல், நீர் மறு சுழற்சி முறைகள் நுண்ணீர் பாசன முறைகள், தெளிப்பு பாசன முறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட உள்ளது.
மேலும், விவரங்களை அறிய திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், விருத்தாசலம், கடலூர் மாவட்டம், தொலைபேசி எண்: 04143-238353 தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.