ஊழியர் விரோத போக்கை கையாளும் அலுவலக மேலாளரைக் கண்டித்து, வருவாய்த் துறை ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா.மகேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மு.ஆறுமுகம் விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் எஸ்.பார்த்திபன், மாநிலச் செயலர்கள் எல்.பிரேமச்சந்திரன், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம், மாவட்டச் செயலர் எல்.ஹரிகிருஷ்ணன், அனைத்து ஓய்வூதியர்கள் சங்க இணைச் செயலர் காசிநாதன், மாவட்ட துணைத் தலைவர் பூபாலச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ஜான்சிராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் விரோத போக்கை கையாளும் அலுவலக மேலாளர் (பொது) என்.பாலச்சந்திரனை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்து, வேறு தகுதியான நபரை நியமிக்க வேண்டும்.
தேர்தல் நடைமுறை விதிகளுக்கு முரணாக தேர்தல் செலவினங்களை திரும்பப் பெற வாய்ப்பளிக்காமல், பட்டியல் தயாரிக்கும் முன்னரே தேர்தல் துணை வட்டாட்சியர்களது மாறுதல்களையும், ஓராண்டுக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட பணி மாறுதல் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் பணி மாறுதல்களையும் ரத்து செய்து, அவர்களைத் தொடர்ந்து முந்தைய பணியிடங்களிலேயே
பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஜான் பிரிட்டோ நன்றி கூறினார்.