கடலூர்

மாணவர்களின் நிலை அறிந்து தரமான கல்வியைக் கற்பிக்க வேண்டும்: கல்வி அதிகாரி அறிவுறுத்தல்

28th Aug 2019 09:57 AM

ADVERTISEMENT

ஆசிரியர்கள் மாணவர்களின் நிலை அறிந்து தரமான கல்வியைக் கற்பிக்க வேண்டும் என்று மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் நடராஜன் அறிவுறுத்தினார்.
சேத்துப்பட்டு புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஜல் சக்தி அபியான் திட்ட விழிப்புணர்வு மற்றும் வேளாண் துறை கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடராஜன் தலைமை வகித்து வேளாண் கண்காட்சியை திறந்து வைத்தார். 
வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர், பள்ளித் தாளாளர் மேரி பிரான்சினா, மாவட்டக் கல்வி அலுவலர் கருணாகரன், வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ரோஸ்லின் வரவேற்றார். 
கண்காட்சியில் மழைநீர் சேகரிப்பு, நுண்ணீர் பாசனம், விசை தெளிப்பான் பாசனத் திட்டம் மற்றும் தோட்டக்கலைத் துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.  முதன்மைக் கல்வி அலுவலர் நடராஜன் கண்காட்சியை பார்வையிட்டு பேசியதாவது: மழைநீரை சேகரித்து, நிலத்தடி நீரை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.தற்போது ஜல் சக்தி அபியான் திட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்களது வீடுகளிலும், ஊரிலும் இந்தத் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 
உயர்ந்த கல்வி மாணவர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடியது. மனிதத் தன்மை அன்பு, நல்லொழுக்கம் என அனைத்தையும் தரக்கூடியது கல்வி. மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தன்னம்பிக்கையுடன் கூடிய கல்வியை பயில வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களின் நிலை அறிந்து தரமான கல்வியைக் கற்பிக்க வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவர் லட்சுமிபதி, அரிமா சங்கத் தலைவர் ஸ்ரீதர், எலைட் ரோட்டரி சங்கத் தலைவர் பாரூக் பாஷா, வாசவி கிளப் தலைவர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT